குற்றச் சம்பவங்களைக் குறைப்பதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும் நீலகிரி மாவட்டம் உதகையில் புதிதாக 25 கண்காணிப்பு கேமராக்கள் காவல் துறை சார்பில் பொருத்தப்பட்டது. உதகை நகரப் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள இக்கண்காணிப்பு கேமராக்கள் உதகை ஜி1 காவல் நிலையத்திலிருந்து கண்காணிக்கவும், இயக்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளன.
இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் தொடங்கிவைத்தார். பின்னர் வர்த்தக சங்கத்தினர், பொதுமக்கள் ஆகியோரிடையே கண்காணிப்பு கேமராக்கள் குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் பேசினார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாவட்டம் முழுவதும் 3 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தபட்டுள்ளதாகவும், அவற்றால் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளதாகவும் கூறினார்.
மேலும், இன்னும் அதிகமான கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வர்த்தகச் சங்கங்கள் முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த அவர், மாவோயிஸ்ட்களின் ஊடுருவலைத் தடுக்க மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் காவலர்கள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாவோயிஸ்ட் ஸ்ரீமதியை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவு!