நாடு முழுவதும் 74ஆவது சுதந்திர தின விழா நேற்று (ஆக.15) கொண்டாடப்பட்டது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் முதுமலையில் 27 வளர்ப்பு யானைகளுடன் சுதந்திர தின விழா கொண்டாடபட்டது. முன்னதாக நூற்றுக்கும் மேற்பட்ட வன அலுவலர்கள் அணிவகுத்து நின்றனர். அவ்விடத்தில் யானைகள் மீது பாகன்கள் யாவரும் மூவர்ண தேசியக் கொடியை பிடித்தவாறு அமர்ந்திருந்தனர்.
யானைகள் வரிசையாக அணிவகுத்து நின்றது காண்போர் கண்களைக் கவர்ந்தது. பின்னர் முதுமலை புலிகள் காப்பக உதவி கள இயக்குநர் செண்பக பிரியா கொடியேற்றும் போது, யானைகள் தும்பிக்கையை தூக்கி மரியாதை செலுத்தின. பின்னர் இனிப்புகள் வழங்கப்பட்டு, அங்குள்ள யானைகளுக்கு கரும்பு, கேழ்வரகு, சத்து மாத்திரைகள் , ராகி, அடங்கிய சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டன.
வனத்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதேபோல், உதகை அரசு கல்லூரி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். கரோனா தடுப்புப் பணியில் சிறப்பாக பணிபுரிந்த அரசுத் துறை ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள், கேடயங்களை அவர் வழங்கினார்.
மேலும், குன்னூர் நகராட்சி சார்பில் சுதந்திர தின விழா எளிமையாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தூய்மைப் பணியாளரான பழனியம்மாள் தேசியக் கொடியினை ஏற்றினார். குன்னூர் நகராட்சி ஆணையர் பாலு தலைமை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு வழக்கும் வகையில் அனைவருக்கும் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தாத இனிப்புகள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க:சுதந்திர தினத்தை முன்னிட்டு செயல்படுத்தப்பட்ட அழகப்பபுரம் பசுமைத் திட்டம்!