நீலகிரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அதிகளவில் கேரட்டை பயிரிட்டு வருகின்றனர். ஆண்டிற்கு சுமார் இரண்டாயிரம் ஹெக்டேர் பரப்பளவில் கேரட் பயிரிடப்பட்டு சுமார் 60 ஆயிரம் டன் கேரட் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் அறுவடை செய்யப்படும் கேரட்களை சுத்தம் செய்ய நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நவீன இயந்திரங்கள் பொருத்தபட்டுள்ளன.
விவசாயிகள் அறுவடை செய்யும் கேரட்கள் சுத்தம் செய்யும் இடத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அதிக தண்ணீர் பயன்படுத்தி சுத்தம் செய்யபடுகின்றன. கேரட் கழுவிய பின் வெளியேறும் தண்ணீர் எந்த வித சுத்திகரிப்பும் செய்யப்படாமல் நேரடியாக நீர் நிலைகளில் கலந்துவிடுகின்றன. எனவே அந்த நீரில் அதிக ரசாயனம் கலந்து இருப்பதால் நீர் நிலைகள் மாசடைந்து வருவதுடன் சுற்றுசூழலும் பாதிக்கபட்டுள்ளதாக சுற்றுசூழல் ஆர்வலர் பென்னி கூறியுள்ளார்.
மேலும் மாசடைந்த இந்த தண்ணீரை மலை காய்கறி சாகுபடிக்கு பயன்படுத்தும்போது நோய்த் தொற்று ஏற்படுவதுடன், அந்த தண்ணீரை குடிக்கும் விலங்குகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்க கேரட் கழுவும் இடங்களில் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாகவும், அதை பின்பற்றாத கேரட் கழுவும் நிலையங்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.