நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுக்குள் கொண்டுவர மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இதுவரை மாவட்டத்தில் 513 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, கிராமப் பகுதிகளில் தொற்றால் பதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது.
இந்நிலையில், உதகை ஜெயின் சங்கம் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மருத்துவக் குழுவுடன் நடமாடும் மருத்துவப் பரிசோதனை வாகனத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று (ஜூலை 21) தொடங்கிவைத்தார். இந்த வாகனங்கள் நகரப் பகுதிகள் மட்டுமின்றி, அனைத்துக் கிராமப் பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களுக்கு உதவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், ”நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், திருமண உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி வழங்கபட்டது. ஆனால், திருமணத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்கின்றனர். இதனால் கரோனா தொற்று அதிகரித்துள்ளது.
இதனால், இனி நீலகிரி மாவட்டத்தில் பொதுநிகழ்ச்சிகள் மூலம் கூட்டங்கள் கூட்ட முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் இதுவரை 26 ஆயிரம் பேரிடம் கரோனா மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் நீலகிரி மாவட்டத்தில் தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை. முகக்கவசம் அணியாதவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும். பொதுஇடத்தில் எச்சில் துப்பினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.