நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்கள் மற்றும் தாவரங்கள் உள்ளன. இவற்றைக் காண இந்தியா மட்டுமின்றி பிற நாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனா். இந்த நிலையில் கரோனா பாதிப்பால் மூடப்பட்டிருந்த பூங்காக்களைத் திறக்க அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்தும் குறைவான பயணிகளே வந்து சென்றனர்.
தற்போது கிறிஸ்துமஸ் தொடர் விடுமுறையின் காரணமாக நீலகிரியில் மீண்டும் சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால், மாவட்டத்திலுள்ள பூங்காக்கள் களைகட்டத் தொடங்கியது. தற்போது சீரான தட்பவெப்ப நிலை நிலவுவதன் காரணமாகவும் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் பூங்காவில் செல்ஃபி மற்றும் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர். இருப்பினும், படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் பலரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஊட்டி உள்ளிட்ட இடங்களில் படகு சவாரி தொடங்கப்பட்டுள்ள நிலையில், குன்னூர் சிம்ஸ் பூங்கா படகு சவாரியையும் தொடங்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஊட்டி பூங்கா நுழைவுக் கட்டணம் உயர்வு; சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி