நீலகிரி: குன்னூர், கோத்தகிரி போன்ற இடங்களில் அதிக அளவில் படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா கடந்த எட்டாம் தேதி திங்கட்கிழமை அன்று தொடங்கியது. இந்த திருவிழா பல்வேறு படுகர் இன கிராமங்களில் கொண்டாடப்பட்டு வந்தது. இந்த திருவிழா 8 நாட்கள் நடைபெறும்.
ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் இந்த ஹெத்தையம்மன் திருவிழா கொண்டாடுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படவில்லை. இந்த ஆண்டு இந்த திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குன்னூர் அருகே உள்ள ஜெகதலா கிராமத்தில் ஆறு படுகர் கிராம மக்கள் ஒன்றாக இணைந்து இன்று (ஜன.9) கடைசி நாள் படுகர் இன மக்களின் ஹெத்தையம்மன் திருவிழாவை மிகவும் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.
இதில் ஜெகதலா, காரக்கோரை, மஞ்சுதளா, பேராட்டி, பெரிய பிக்கட்டி, சின்ன பிக்கட்டி படுகர் இன கிராமத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஜெகதலா கிராமத்தில் வனத்தில் உள்ள கோயிலில் ஆறு கிராம ஊர் பூசாரிகள் முன்னிலையில், விரதமிருந்த இளைஞர்கள் ஹெத்தையம்மனை தேரில் வைத்தும் தோள் மீது சுமந்தும், பயபக்தியுடன் அவர்களின் குலதெய்வமான ஹெத்தையம்மனை வணங்கி, பக்தி பாடல்களை பாடி, வனப்பகுதியில் இருந்து ஊர்வலமாக சென்றனர்.
முன்பாக சிறு பெண் சிறுமிகளை ஹெத்தையம்மன் போல் அலங்கரித்து அவர்களை ஊர்வலத்தின் முன்பு நடக்க வைத்து சாலையில் உதிரிப்பூக்களை போட்டும் தீர்த்தங்களை தெளித்து வழிபட்டனர். தொடர்ந்து தங்களின் பாரம்பரிய நடனமாடியும் ஆண்களும் பெண்களும் ஊர்வலத்தின் முன்பாக பேண்ட் வாத்தியத்துடன் வந்தனர். ஊருக்குள் வந்தவுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுகர் இன மக்கள் மட்டுமின்றி மற்ற மக்களும் ஹெத்தையம்மனை வணங்கி தங்களுடைய வீடுகளுக்கு முன்பு வந்த ஹெத்தை அம்மனை காலில் தண்ணீர் ஊற்றி கீழே விழுந்து வணங்கினர்.
இந்த திருவிழாவில் ஹெத்தையம்மன் ஊரின் நடுவே உள்ள சிறிய கோயில் உள்ள மரத்தின் அடியில் தேரை வைத்து, அங்கு ஆறு கிராம மக்களும் வந்து வழிபட்டுச் சென்றனர். இந்த திருவிழாவில் சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை தங்களுடைய படுகர் கலாசார உடை அணிந்து நடனமாடி மகிழ்ந்தனர். திருவிழாக்கு வந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: "ஆளுநரை அமர வைத்துக்கொண்டு முதலமைச்சர் பேசியது மரபுக்கு எதிரானது" - ஈபிஎஸ்!