நீலகிரி: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தொடர்ந்து லேசானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இதனால் மண் சரிவு ஏற்படுவதும், மரங்கள் விழுவதும் தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் உதகை கோத்தகிரி போன்ற பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக பெய்த தொடர் கனமழையால், மாவட்டத்தின் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளன.
இது மட்டுமில்லாமல் ஆங்காங்கு மரங்கள் விழுந்து உள்ளன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பல இடங்களில் போக்குவரத்து சேவையும் துண்டிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே மலை இரயில் சேவை துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கோத்தகிரி பகுதியில் வீட்டினுள் மழைநீர், புகுந்து, அணைக்கட்டின் மதகுகள் வழியே வெளியேறியது. இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதனைத் தொடர்ந்து குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள அருவிகளில் காட்டாற்று வெள்ளம் போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதே போன்று கோத்தகிரி கரிக்கையூர் பகுதியில் சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில், நிலச்சரிவு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டது.
இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதே போன்று குன்னூர் உள்ள ஆணை பள்ளம் செல்லும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு, சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட பழங்குடியினர்கள் வசித்து வரும் நிலையில், அவசர தேவைக்கு கூட வெளியே செல்ல முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இதனால் மாவட்ட நிர்வாகம் அதிகாரிகளை இப்பகுதிக்கு அனுப்பி, உடனடியாக சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் அதிகரித்து வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என யாரும் ஆற்றங்கரையோரப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் தற்போது மழையின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலாப் பயணிகள் யாரும் வர வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
மேலும் நீலகிரி மாவட்டத்தில் பெய்து தொடர் கனமழையின் காரணமாக பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை விடப்பட்டுள்ளது. நீலகிரியின் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர் மழையால் பாதிப்புகள் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: சூறைக்காற்றில் மரம் முறிந்து பேருந்தில் விழுந்து விபத்து! நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்! திக் திக் நிமிடங்கள்!