குன்னூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக மழை பெய்துவந்தது. தொடர்ந்து மழைப்பொழிவு காரணமாக சரிவான பகுதி மண், மழைநீரில் ஊறி ஈரப்பதம் நிறைந்து காணப்பட்டது.
இந்நிலையில் நேற்று (செப்.6) மதியத்திலிருந்து குன்னூர் பகுதியில் இடியுடன்கூடிய கனமழை பெய்ததால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து பெய்யும் மழையின் காரணமாக குன்னூர் வி.பி. தெரு பகுதியில் ஆற்றின் கரையோரம் மண் அரிப்பு ஏற்பட்டு இடிந்து விழுந்தது.
இதனால் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார், பிக்கப் வாகனங்கள் ஆற்றில் விழுந்து சேதமடைந்தன. அந்தப் பகுதியில் யாரும் இல்லாததால் பெரும் நாசம் தவிர்க்கப்பட்டது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் வாகனங்கள் விழுந்த இடத்தில் கூடினர். காவல் துறையினர் உதவியுடன் தீயணைப்புத் துறையினர் ஆற்றில் விழுந்த வாகனங்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மேலும் குன்னூர் அருகே உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் கலா என்பவரின் வீடு முழுவதும் இடிந்து சேதம் அடைந்தது. வீட்டில் இருந்த மூவர் வெளியே சென்றதால் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.
அப்பகுதிக்கு வந்த அரசு அலுவலர்கள் தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் அப்பகுதிக்குச் செல்ல தடைவிதித்தனர். அப்பகுதியில் வீட்டில் இருந்தவர்கள் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டனர்.
அதிக மழை பெய்துவருவதால் குன்னூர் பகுதியில் குடியிருக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.