உதகை, கூடலூர் ஆகிய பகுதிகளில் ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்குப் பருவமழை பெய்யும். பருவமழையினால் நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரிப்பதோடு விவசாயத்திற்கும் போதுமானதாகவும் இருக்கும். ஆனால் இந்தாண்டு ஜூன் மாதத்தில் தொடங்க வேண்டிய தென்மேற்குப் பருவமழை இதுவரை பெய்யவில்லை.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக உதகை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை பெய்துவந்தது. இந்நிலையில், நேற்று உதகை, தலைகுந்தா, பிங்கர்போஸ்டு, காந்தள், பாலாடா, முத்தோரை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் கரைபுரண்டு ஓடியது. பருவமழை பெய்யாத நிலையில் இன்று பெய்த கனமழையினால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதமான காலநிலை நிலவும் உதகையில் மழை பெய்துள்ளதால் மேலும் குளிர்ச்சியான சூழல் ஏற்படுத்தியுள்ளது.