நீலகிரி மாவட்டம் உதகை, அவலாஞ்சி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் மழை சற்று குறைந்து காணப்பட்டாலும், மாலை இரவு நேரங்களில் இடைவிடாமல் மழை பெய்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. இந்த மழையில் சிக்கி இதுவரை ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு, மண்சரிவு ஏற்பட்டுள்ளது. பல சாலைகளில் மரங்களும் விழுந்துள்ளன. சுமார் 1,500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் மலை காய்கறி பயிர்கள், நீரில் மூழ்கி சேதமடைந்தன.
மக்களைக் காப்பாற்றவும், சாலைகளை சீரமைக்கவும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், அவலாஞ்சி பகுதியில் 40 குடும்பங்கள் சிக்கியுள்ளதாகவும், அவர்கள் வெளியே வரமுடியாத சூழல் உருவாகியுள்ளதாகவும் கூறப்பட்டது. அவர்களை சிறிய ரக வானூர்தி உதவியுடன் மெல்ல மெல்ல மீட்டு வருகின்றனர்.
மழை தொடர்ந்து பெய்து வருவதால், குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்திலிருந்து, 65 ராணுவ வீரர்கள் வரவைக்கப்பட்டுள்ளனர். ராணுவ வீரர்கள், பேரிடர் மேலாண்மை, தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர், வனத்துறையினர் என பலரும் சாலையை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வரலாறு காணாத அளவிற்கு அவலாஞ்சி பகுதியில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் 450 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் மழை தீவிரமாகும் எனச் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர்.