நீலகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணிகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். உதகை அரசு தலைமை மருத்துவமனை, புதிதாக கட்டபட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய இடங்களை அவர் பார்வையிட்டார். மசினகுடி அருகே உள்ள செம்மநத்தம் பழங்குடியின கிராமத்தில் கரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், " நீலகிரி மாவட்டத்தில் 27,032 பழங்குடியின மக்கள் உள்ளனர். அதில் 21,435 பேர் 18 வயதிற்கு மேல் உள்ளனர். அவர்களில் 3,129 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஜுன் மாதம் இறுதிக்குள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பழங்குடியின மக்களுக்கும் தடுப்பூசி போடப்படும்.
இதன் மூலம் நாட்டிலேயே அனைத்து பழங்குடியின மக்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு முதல் இடத்தைத் தமிழ்நாடு பிடிக்கும். சென்னை அரசு பொது மருத்துவமனையை போலவே நீலகிரி மாவட்டத்திலும் கரோனா தடுப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கரோனா தொற்று வேகமாக குறைந்து வருகிறது. தொற்றால் பாதிக்கப்படுவோரை விட குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தமிழ்நாட்டிற்குத் தேவையான கரோனா தடுப்பூசி பெற விரைவில் மறு டெண்டர் கோரப்படும். தமிழ்நாட்டில் 870 மருத்துவமனைகள் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்தால், அந்த மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் 81 ஆயிரம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கருப்பு பூஞ்சை நோயால் 921 பேர் பாதிப்பு!