இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பிரதேசமான நீலகிரியில் ஏராளமான சுற்றுலா மையங்கள் உள்ளன. அவற்றைக் கண்டு ரசிக்க லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஆண்டுதோறும் வந்துசெல்கின்றனர். இதனால் இங்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகம். எனவே காற்று மாசு அதிகரித்து சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனைக் கருத்தில்கொண்டு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வாகனங்களுக்குப் பசுமை வரி வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி இங்கு வரும் அனைத்து வாகனங்களும் ரூ.30 பசுமை வரியாக வசூலிக்கப்பட்டுவருகிறது.
கரோன பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த மார்ச் மாதம் முதல் நீலகிரிக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்து தற்காலிகமாக பசுமை வரி வசூலிப்பது நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.
எனவே 8 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பசுமை வரி வசூலிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் வரி உயர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வெளி மாநிலம், வெளி மாவட்டத்திலிருந்து வரும் அனைத்து வாகனங்களுக்கும் ரூ.30 வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது பேருந்து, லாரி போன்ற கனரக வாகனங்களுக்கு ரூ.100, மேக்சி கேப் வாகனங்களுக்கு ரூ.70, கார், ஜீப் வாகனங்களுக்கு ரூ.30, மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ.15, அனைத்து வகையான இரு சக்கர வாகனங்களுக்கும் ரூ.10 என வரையறை செய்யப்பட்டுள்ளது.
இந்தப் புதிய முறை இன்றுமுதல் அமுலுக்கு வருகிறது. வசூலிக்கப்படும் இந்தத் தொகை மாவட்டத்தில் பசுமையை பாதுகாக்கும் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டுவருகிறது.