நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள சந்திரா காலனி பகுதியில் கடந்த மாதத்தில் பெய்த கனமழையால் அப்பகுதியில் உள்ள ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது.
இதனால் சந்திரா காலனி, கரோலினா கரி, மராஹாட்டி உள்ளிட்ட சுற்றுப்புற கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். மழையால் அப்பகுதியிலுள்ள வீடுகள் சேறும் சகதியுமானது. மழைநீரும் வீட்டிற்குள் புகுந்ததால் பாதிக்கப்பட்ட ஆல்பர்ட், அவரது சகோதரி எலிசபெத் ஆகியோரை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
இந்நிலையில் இப்பகுதிகளில் சிலர் முறையான அனுமதி பெறாமல் தொடர்ந்து வீடு, கட்டடங்களை கட்டி வருகின்றனர். இதை அறிந்த நகராட்சி இதற்கு தடை விதித்தது. இது குறித்து இப்பகுதிவாசிகள் கூறுகையில், 48 ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருந்த ஆற்றின் மேல் கட்டட பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இங்குள்ள சாலை, மாற்றுப் பாதை அழிக்கப்பட்டு 23 அடியாக இருந்த சாலையை ஆக்கிரமிப்புகளால் தற்போது 12 அடியாக மாறியுள்ளது. இது குறித்து ஆய்வு மேற்கொண்ட கூடுதல் ஆட்சியர் ரஞ்சித் சிங் கூறுகையில், “இங்கு மண் அகற்றிய இரு டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் குன்னூர் நகராட்சி நிர்வாகம் இங்கு நடைபெற்ற பணிகளுக்கு தடை விதித்துள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குன்னூர் கண்டோண்மென்ட் வாரியத்தில் தடுப்பூசி போடும் பணி தொடக்கம்!