நீலகிரி: உதகையில் வங்கிகள் மூலம் வழங்கப்படும் பல்வேறு கடன் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, பயனாளிகளுக்கு தாமதமின்றி கடன் வழங்க மாவட்ட வங்கிகள் சங்கமம் சார்பில் மெகா கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.
இதை மாநில வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்து, வங்கிகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினியும் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராமச்சந்திரன், “முதலமைச்சர் ஸ்டாலினின் சிறப்பான ஆளுமையால் தொழில் வளர்ச்சியில் மூன்றாம் இடத்தில் உள்ள தமிழ்நாட்டை விரைவில் முதலாவது இடத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
உதகையில் நலிவடைந்து மூடப்பட்ட இந்துஸ்தான் புகைப்பட தொழிற்சாலைக்கு சொந்தமான 600 ஏக்கர் நில பரப்பில் 3,000 பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில் முதலமைச்சர் உத்தரவின் பேரில் புதிய தொழிற்சாலைகள் மற்றும் தொழிற் பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.
மேலும், வாடிக்கையாளர்களை தேடி வந்து வங்கிகள் கடனுதவி வழங்குவதால், இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், 15 வங்கிகள் மூலம் 2,734 பயனாளிகளுக்கு 160 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவிகளை அமைச்சர் வழங்கினார்.
இதையும் படிங்க: 'தீபாவளிக்கு ஆவின் இனிப்புகளை வாங்குங்கள்' - தலைமை செயலாளர் இறையன்பு