நீலகிரி மாவட்டம், கூடலூர் நகராட்சிக்குள்பட்ட எஸ்.எஸ். நகர்ப் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இப்பகுதி மக்களுக்கு கடந்த ஒரு வாரமாக தொற்று ஏற்பட்டு பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், பலர் வீடுகளில் சிகிச்சைப் பெற்றும் வந்தனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களாக அந்த நோயானது தீவிரமடைந்துள்ள நிலையில் ஏப்ரல் 28ஆம் தேதி ஒரு மருந்துக் கடையில் பணியாற்றிய பெண் ஒருவர் மரணமடைந்தார். இதையடுத்து, ஏப்ரல் 29ஆம் தேதி காலை முதல் 50-க்கும் மேற்பட்ட சுகாதாரத் துறையினர், நகராட்சி ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று ஆய்வுசெய்தனர்.
அப்போது, வீட்டைச் சுற்றிலும் டெங்கு கொசு பரவக் காரணமாக உள்ள வாகன டயர்கள், தேங்காய் சிரட்டைகள், நெகிழிப் பொருள்களை அலுவலர்கள் அகற்றினர். பின்னர் மருத்துவக்குழுவினர் வீடு வீடாகச் சென்று டெங்கு தொற்று, கரோனா நோய்த் தொற்று ஏதும் உள்ளனவா என்பதனைக் கண்டறிய ரத்த மாதிரிகளை எடுத்தும், தொண்டைப் பகுதியிலிருந்து சளி மாதிரிகளைச் சேகரிக்கும் பணியிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
மேலும் தமிழ்நாடு அரசு பல வருடங்களாக டெங்கு பரவுவதைத் தடுக்க வீடுகளைச் சுற்றி நீர் தேங்கும் பொருள்களை வீசாமல் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைக்கக் கூறியும் அதனைக் கடைப்பிடிக்காத வீடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அலுவலர்கள் எச்சரிக்கைவிடுத்தனர்.
இந்தச் சந்தேகத்திற்கிடமான காய்ச்சலால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐந்திற்கும் மேற்பட்டோருக்கு தற்போது டெங்கு தொற்று உள்ளது. இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க:தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காததால் நோய்த்தொற்று அதிகரிப்பு - முதலமைச்சர் கவலை