கேரளாவின் ஆலப்புழா, கோட்டயம் பகுதிகளில் பறவைக் காய்ச்சலால் ஏராளமான வாத்துகள் இறந்து வரும் சூழலில், குட்டநாட்டில் பண்ணைகளில் வளர்க்கப்படும் 2,700 வாத்துகளையும், வீடுகளில் வளர்க்கப்பட்ட 300 வாத்துகளையும் கொன்று அழிக்கும் பணி நேற்று நடந்தது. மேலும் சுமார் 2 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள வாத்துகளை கண்டறிந்து கொல்லும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் கேரளா எல்லையில் உள்ள கூடலூர் - பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட 8 சோதனைச் சாவடிகளில் கோழிகள் மற்றும் பறவைகள் மற்றும் தீவனங்கள் கொண்டு வரத் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடலூர் பகுதியில் சுமார் 400 வாத்துகள் மற்றும் 15 ஆயிரம் கோழிகள் வளர்க்கப்படும் பண்ணையில் கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் பகவத்சிங் மற்றும் 3 கால்நடைத்துறை மருத்துவர்கள் அடங்கிய குழு இன்று ஆய்வு மேற்கொண்டது.
அப்போது அங்கு வளர்க்கப்படும் வாத்துகள், கோழிகளை ஆய்வு செய்து மாதிரிகளை சேகரித்தனர். தொடர்ந்து அந்த நிறுவனத்திற்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு அரசின் கட்டுப்பாட்டை மீறி, வெளியிலிருந்து தீவனங்கள் மற்றும் கோழிக் குஞ்சுகள் கொண்டு வரக் கூடாது எனவும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்து சென்றனர்.
இதையும் படிங்க: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு! முதலமைச்சர், துணை முதலமைச்சர் தொடங்கி வைப்பு!