நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் பிரதானத் தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது. இங்கு வசிக்கும் மக்களில் 80 விழுக்காடு சிறு, குறு விவசாயிகள் தான் உள்ளனர். சில தினங்களுக்கு முன்பு, தென்னிந்திய தேயிலை வாரியம் தரமற்ற தேயிலைத் தூளை உற்பத்தி செய்யும் 17 தொழிற்சாலைகளுக்கு நோட்டீஸ் வழங்கியதால், தொழிற்சாலை உரிமையாளர்கள் விவசாயிகளிடம் இருந்து தேயிலை கொள்முதல் செய்வதை நிறுத்தியுள்ளனர்.
இதனால், தங்களது வாழ்வாதாரம் பாதிப்படைவதாக குன்னூரில் உள்ள தென்னிந்திய தேயிலை வாரிய அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநர் பாலாஜி (IAS) தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சு வார்த்தையில் தேயிலை கொள்முதல் செய்யாத தொழிற்சாலைகளில் அலுவலர்களைக் கொண்டு ஆய்வுகள் நடத்தி, சுமுகமானதாகத் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதைத் தொடர்ந்து, விவசாயிகள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: போதை மாத்திரை கேட்டு இளைஞர் கடத்தல்