கூடலூரை அடுத்துள்ள முதுமலை வனப்பகுதியில், மாயார் பள்ளத்தாக்கில் அடர்ந்த வனப்பகுதியில் நடுவே உள்ளது சீகூர், மாயார் அருவிகள். அடர்ந்த வனப்பகுதி என்பதால் பல வருடங்களாக இந்த நீர்வீழ்ச்சியை காண சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஈகோ டூரிசம் திட்டம் மூலம் பதிவு செய்யப்பட்ட தனியார் சுற்றுலா வாகனம் மூலம் பாதுகாப்பான முறையில் கண்டு ரசிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், கடந்தாண்டை காட்டிலும் இந்த வருடம் அப்பகுதியை சுற்றி கனமழை பெய்து வருவதால் அந்த அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. ஆனால் தற்போது கரோனா தொற்றால் சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்ட நிலையில், இந்த அருவிகளுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது உதகை குன்னூர் பகுதிகளில் பூங்கா உள்பட முக்கிய சுற்றுலா தலங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. அதேபோல், இந்த அருவிகளை காணவும் உடனடியாக சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என, அப்பகுதியில் உள்ள சுற்றுலா வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில், இந்த சுற்றுலாவை நம்பியுள்ள சுற்றுலா வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் எனவும் கோரிக்கை வைத்தனர்.