நீலகிரி: தீபாவளிக்கு எதிர்பார்த்த போனஸ் வருமா? என்ற சந்தேகத்தில் எதிர்நோக்கி காத்திருக்கும் தற்போதைய காலகட்டத்தில், ஊட்டியில் உள்ள எஸ்டேட் ஒன்றில், ஊழியர்களுக்கு யாரும் கனவிலும் எதிர்பார்த்திடாத போனசை வழங்கியிருக்கிறார் அந்த எஸ்டேட் உரிமையாளர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் உள்ள எஸ்டேட் ஒன்றின் உரிமையாளரான திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் சிவகுமார், தனது எஸ்டேட்டில் பணிபுரியும் 15 ஊழியர்களுக்கு ஆளுக்கு ஒரு ராயல் என்ஃபீல்டு புல்லட் ஒன்றை இந்தத் தீபாவளி போனஸாக வழங்கி சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தியுள்ளார். இதில் டிரைவர் முதல் மேனேஜர் வரை எல்லோருக்கும் எந்தவொரு வேறுபாடும் இல்லாமல் டூவீலர்களை போனஸாக வழங்கியுள்ள அவரது செயல்தான் பார்க்கும் எல்லோரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சிவகுமார், கோத்தகிரி பகுதியில் குடியேறி சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இங்கு இவர் எஸ்டேட் ஒன்றைச் சொந்தமாக வாங்கி கேரட், பீட்ரூட், ஸ்ட்ராபெரி உள்ளிட்ட மலை காய்கறிகள், பழங்கள் மற்றும் கொய் மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார். தனது நிறுவனத்தில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி சமயங்களில் சர்ப்ரைசாக சிறப்புப் பரிசுகள் கொடுப்பதைத் தனது வழக்கமாக வைத்துள்ளார் சிவகுமார்.
அந்த வகையில், தனது கார் டிரைவர் முதல் எஸ்டேட் மேனேஜர் வரை 15 ஊழியர்களைத் தேர்வு செய்து அவர்கள் விரும்பும் வாகனங்களை அறிந்துகொண்டு, ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன், ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் 350, ராயல் என்ஃபீல்டு ஹன்ட்டர் 350, யமஹா ரே ஸ்கூட்டர் என 15 வாகனங்களை புக் செய்திருக்கிறார்.
இதன் தொடர்ச்சியாக 15 பேரையும் அழைத்து, அவர்களுக்குப் பிடித்த வாகனத்தின் சாவியை அவர்களின் கையில் சர்ப்ரைசாக கொடுத்திருக்கிறார். இதனைச் சற்றும் எதிர்பாராத அந்த ஊழியர்கள் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினர். மேலும் இது குறித்து தொழிலதிபர் சிவக்குமாரிடம் கேட்டபோது, "நமக்காக பாடுபடும் பணியாளர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று யோசித்தபோது, நமது நிறுவனம் சார்பில் அவர்களுக்கான இருப்பிடம், அவர்களின் குழந்தைகளுக்கான கல்வி, மருத்துவம் போன்றவற்றை அவர்களுக்கு வழங்குவதில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பணிக்கு வரும் பணியாளர்களுக்கு காலை மற்றும் மதிய உணவு நமது நிறுவனத்தில் உள்ள உணவகத்தில் வழங்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் இந்த நேரத்தில் பிற தொழிலதிபர்களிடம் ஒன்று குறிக்கொள்ள விரும்புகிறேன் என்று கூறி, "தொழிலதிபர்களான நாம் இந்த நிலையில் இருப்பதற்கு முக்கிய காரணம் நமது ஊழியர்களே. ஆகவே, அனைத்து தொழிலதிபர்களும் தங்களது ஊழியர்களை மகிழ்ச்சியாகவும் அவர்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் உங்களது தொழிலில் மேன்மேலும் முன்னேற்றம் அடைவது மட்டும் இன்றி உங்களது ஊழியர்களும் அவர்களது வாழ்வில் முன்னேற்றம் அடைய இது போன்ற செயல்கள் வாய்ப்பாக அமைந்து சமூகம் முன்னேறும்" என்ற உன்னத கருத்தை முன்வைத்தார்.
இதையும் படிங்க: நெல்லை லாலா கடைகளில் இனிப்பு தயாரிப்பு மும்முரம்.. தீபாவளிக்கு புது வரவுகள் என்ன?