நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் குரங்குகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. குறிப்பாக குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அதிக அளவில் குரங்குகள் காணப்படுகின்றன. அங்குவரும் சுற்றுலாப் பயணிகள் சாலையில் உணவுகளை வீசிச் செல்வதால், அவற்றைத் தேடி சாலைக்கு வரும் குரங்குகள் அவ்வப்போது வாகனங்களில் அடிபட்டு இறப்பதுடன் பல குரங்குகள் காயமும் அடைந்துவருகின்றன.
இவ்வாறு அடிபடும் குரங்குகளுக்குச் சிகிச்சை அளித்து பராமரிக்க குன்னூரில் குரங்குகள் காப்பகம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதனையொட்டி குன்னூர் வட்டப்பாறை அருகே குரங்குகள் காப்பகம் அமைக்க புதிய கட்டடம் கட்டப்பட்டது. இதனை 2015ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா காணொலி வாயிலாகத் திறந்துவைத்தார்.
எனினும் தொடர்ந்து இந்தச் சரணாலயம் செயல்படாமல் இருந்த நிலையில் கடந்த ஓராண்டிற்கு முன்பு அதிவிரைவுக் குழு மையமாக மாற்றப்பட்டது.
தற்போது இந்த மையமும் செயல்படாமல் பூட்டப்பட்டு புதர் மண்டி கிடைக்கிறது. இதனால் இந்த மையத்தை மீண்டும் குரங்குகள் காப்பகம் அமைக்க வேண்டும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.