நீலகிரி : கூடலூர் பகுதியில் காயத்துடன் சுற்றி வந்த 35 வயது மதிக்கதக்க ஆண் காட்டு யானைக்கு நாளை சிகிச்சையளிக்கப்படவுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் நகரை சுற்றியுள்ள மேல் கூடலூர், சில்வர் கிளவுட், கோக்கால் பகுதிகளில் முதுகு, வால் பகுதியில் பலத்த காயங்களுடன் 35 வயது மதிக்கதக்க ஆண் யானை ஒன்று சுற்றி வந்தது. இந்த யானை அவ்வப்போது குடியிருப்புப் பகுதிகளுக்கும், விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதங்களை விளைவிப்பதோடு பொதுமக்களுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதால் இதனை மயக்க ஊசி போட்டு பிடித்து முதுமலை முகாமிற்கு கொண்டு செல்ல வேண்டும் என தொடர்ந்து அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையடுத்து, வனத்துறையினர் கடந்த ஒரு வார காலமாக பழங்களுக்குள் மருந்துகளை வைத்து யானைக்கு வழங்கி சிகிச்சை அளித்து வந்தனர். பின்னர், அந்த யானையை பிடித்து முதுமலைக்கு எடுத்துச் சென்று கிரால் கூண்டில் வைத்து சிகிச்சை அளிக்க கிரால் கூண்டு தயார் செய்யபட்டு வந்தது.
இந்நிலையில், அந்த யானையை இன்று (ஜூன் 16) கூடலூர் மார்தோமா நகர் பகுதியில் கும்கி யானைகளை கொண்டு மயக்க ஊசி செலுத்தாமல் பிடித்தனர். காயமடைந்த யானை அங்கு கயிற்றினால் கட்டி வைக்கப்பட்டு பழங்களுக்குள் மருந்துகள் வைத்து வழங்கபட்டு வருகின்றன.
நாளை (ஜூன் 17) காயமடைந்த யானையை லாரியில் ஏற்றி முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைக்கபட்டுள்ள கிரால் கூண்டில் வைத்து யானைக்கு சிகிச்சை அளிக்கபடவுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நிலப்பாறை கால்வாயில் இருந்து பாசனத்திகு நீர் திறப்பு