நீலகிரி: மசினகுடி பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணை காட்டு யானை துரத்தும் பரபரப்பு வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
மசினகுடி அருகே உள்ள பொக்காபுரம் மாரியம்மன் கோயில் மற்றும் ஆனைகட்டி ஆனைக்கல் மாரியம்மன் கோயில் திருவிழாக்கள் நடைபெற்று வருவதால் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு சென்று வருகின்றனர். இதையடுத்து மசினகுடி - கல்லட்டி சாலை அமைந்துள்ள வாழைத்தோட்டம் பகுதியில் இருக்கும் சீகூர் ஆற்றுப்பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த பெண் ஒருவரை, சாலைக்கு வந்த காட்டு யானை ஒன்று துரத்தும் பரபரப்பு வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.
அதில் சாலையின் குறுக்கே நின்ற யானையை கடந்து கார் ஒன்று செல்ல, அந்தக் காரின் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணை யானை துரத்தி செல்வதும், அப்போது அச்சத்தில் அந்த பெண் தனது வாகனத்தை கீழே போட்டுவிட்டு யானையிடம் இருந்து தப்பிப்பதை அங்கிருந்தவர்கள் செல்போன் மூலம் பதிவு செய்துள்ளனர். இந்தப் பரபரப்பான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலை, மசினகுடி ஆகிய பகுதி அடர்ந்த வனப்பகுதி ஆகும். இந்தப் பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் அதிகமாக உள்ளன. இதில் மசினகுடி பகுதி யானைகள் அதிக நடமாட்டம் உள்ள பகுதியாக உள்ளது. யானை வழித்தடத்தில் முக்கிய இடமாகவும் இருந்து வருகிறது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் எப்போதும் யானைகளின் நடமாட்டம் காணப்படும்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, யானை நடமாட்டம் அதிகமாக உள்ள இந்தப் பகுதியில் மிக கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும். சாலை ஓரத்தில் நிறுத்தி வனவிலங்குகளுக்கு தொந்தரவு அளிக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இரும்பு வேலியில் சிக்கி கடமான் இறப்பு!