தமிழ்நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 18-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கபட்ட நாளில் இருந்து தேர்தல் விதிகள் அமலில் இருந்து வருகின்றன. இதுதவிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தேர்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மலை மாவட்டமான நீலகிரியிலும் தேர்தலுக்கான பணிகள் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. அதன் ஒரு கட்டமாக வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகிறது. இதனிடையே தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி உதகையில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சி தலைவர் இன்னசென்ட் திவ்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணியில் 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வேண்டும், ஒவ்வொரு இந்திய குடிமக்களும் வாக்களிப்பதை தவிர்க்க கூடாது என்பதனை வலியுறுத்தி மாணவிகள் பதாகைகளை ஏந்தியவாறு கோஷமிட்டு சென்றனர். தனியார் பள்ளியில் தொடங்கிய இப்பேரணி ஏ.டி.சி. காபி ஹவுஸ் கமெர்ஷியல் சாலை வழியாக சென்று காந்தி சிலை அருகே முடிவடைந்தது.
பேரணியில் கலந்துகொண்ட மாணவிகள் கூறுகையில், வாக்களிப்பதன் அவசியம் குறித்து பேரணியில் மட்டுமின்றி, தங்களின் குடும்பம், கிராமம் என அனைவரிடத்திலும் தெரிவிப்போம் என கூறினார்கள்.