நீலகிரி: உலக பாரம்பரியச் சின்னமான நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயிலானது, மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து குன்னூருக்கு நாள்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. உள்நாடு மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் இந்த ரயில் கவர்ந்து உள்ளது. அதனால், இந்த ரயிலில் பயணம் மேற்கொள்ள சுற்றுலாப் பயணிகள் அலாதி பிரியம் கொண்டு உள்ளனர்.
இந்நிலையில், கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதையடுத்து சீரமைப்புப் பணிகள் முடிந்து 22 நாட்களுக்குப் பிறகு, கடந்த வாரம் மீண்டும் இந்த ரயில் சேவை செயல்படத் துவங்கியது.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் சாரல் மழையுடன் கூடிய பனிமூட்டம் சூழ்ந்த காலநிலை நிலவி வருகிறது. இதனால், அப்பகுதியில் அவ்வப்போது மிதமான சாரல் மழை பெய்து வந்தது.
சாரல் மழையினைத் தொடர்ந்து, மேட்டுப்பாளையம் - குன்னூர் மலைப்பாதையில் உள்ள ஹில்குரோ பகுதியில் தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மலை ரயில் பாதையில் மண், மரம், கற்கள் விழுந்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், இவற்றை சீர் செய்ய வேண்டும் என்பதற்காக இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு குன்னூர் வந்த மலை ரயில், மீண்டும் மேட்டுப்பாளையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது. இதையடுத்து மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்ப்பட்டு உள்ளதால், இன்று ஒரு நாள் மட்டும் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.