நீலகிரி மாவட்டம் குன்னூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் பெய்த கனமழையால் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டதுடன் சாலைகளில் பாறைகள் விழுந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் குன்னூர்-மஞ்சூர் நெடுஞ்சாலையில் மூன்று ராட்சத பாறைகள் விழுந்தன. அந்நேரத்தில் வாகனப் போக்குவரத்து இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பினால் சாலையின் இரு புறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நிறுத்தப்பட்டன.
தகவலறிந்து விரைந்து வந்த நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் ஜேசிபி, கம்ப்ரசர் உள்ளிட்ட எந்திரங்களை கொண்டு பாறைகளை உடைத்து அகற்றினர். தொடர்ந்து போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்தனர். ராட்சத பாறைகள் சாலையில் விழுந்த சம்பவத்தினால் அப்பகுதியில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் படிக்க: தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கொட்டித்தீர்த்த மழை!