நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நடுவட்டம் தனியார் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த கண்ணதாசன், மீனாட்சி தம்பதியின் இரண்டைரை வயது குழந்தை தர்ஷிகா. தீபாவளியன்று காலையில் தர்ஷிகாவிற்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மூக்கிலிருந்து ரத்தம் வந்துள்ளது. இதில் அதிர்ச்சியடைந்த பெற்றோர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தார்கள்.
கிராமத்திற்கான சாலை பழுதடைந்து குண்டும், குழியாக உள்ளதால் ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால் குழந்தையை நடுவட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் காண்பித்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் இல்லாததால் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதனையடுத்து குழந்தையின் உடல் அங்கு உடற்கூறாய்வு செய்யப்படாமல், 65 கி.மீ. தொலைவில் உள்ள குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. பின்னர் குன்னூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்து அங்கேயே புதைத்துள்ளனர்.