நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கூடலூர் (தனி) ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலின்படி இம்மூன்று தொகுதிகளில் மொத்தம் ஐந்து லட்சத்து 69 ஆயிரத்து 913 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். இதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றை செய்வதற்கு ஏராளமானோர் மனு அளித்தனர்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீலகிரி மாவட்டத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியலை ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டார். இதனை அலுவலர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனர். இறுதி வாக்காளர் பட்டியலின்படி உதகை, குன்னூர், கூடலூர் (தனி) ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆண்கள் இரண்டு லட்சத்து 78 ஆயிரத்து 204, பெண்கள் இரண்டு லட்சத்து 98 ஆயிரத்து 479, மூன்றாம் பாலினத்தவர் எட்டு பேர் என மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை ஐந்து லட்சத்து 76 ஆயிரத்து 691 பேர் உள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், “கடந்த டிசம்பரில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலுக்கு பிறகு பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்டவைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்படி பெயர் நீக்கத்திற்கு 694 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மேலும், 10 ஆயிரத்து 773 பேர் பெயர் சேர்ப்பதற்கு விண்ணப்பித்திருந்தனர். தற்போது 10 ஆயிரத்து 77 பேர் கூடுதலாகச் சேர்க்கப்பட்டு தற்போது ஐந்து லட்சத்து 76 ஆயிரத்து 691 பேர் இடம்பெற்றுள்ளனர்” என்றனர்.
இதையும் படிங்க: ராமநாதபுரத்தில் புதிய மருத்துவக் கல்லூரி - அடிக்கல் நாட்டும் முதலமைச்சர்