நீலகிரி மாவட்டம் குன்னூர், அதன் சுற்றுப்புறங்களில் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனால் கட்டடங்கள் கட்டுவதற்கு அரசு பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. விதிமுறை மீறிய கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் உள்ளாட்சி அலுவலர்கள் அவ்வப்போது விதிமீறல் கட்டடங்களுக்கு சீல் வைத்து வருகின்றனர். எனினும் கட்டடங்களில் சீல் அகற்றப்பட்டு மீண்டும் கட்டுமானங்கள் நடந்து வருகின்றன.
குறிப்பாக குன்னூர் நகராட்சி ஆணையாளர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால், அலுவலர்கள் பெரிதும் கண்டு கொள்ளாததால் விதிமீறிய கட்டடங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுமட்டுமின்றி தேயிலைத் தோட்டங்களை அழித்தும், மலையைக் குடைந்தும், பாறைகளை உடைத்தும் சொகுசு விடுதிகள் கட்டுமானங்கள், ஊராட்சி தலைவர்கள் உடந்தையுடன் அதிகரித்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இப்பகுதிகளில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.