கொரோனா நோய்க் கிருமியின் தாக்குதல் உலகம் முழுவதும் பீதியை ஏற்படுத்திய நிலையில், அதன் தாக்கம் இந்தியாவில் கேரளா, கர்நாடகா மாநிலத்தில் வெகுவாக உள்ளது. இந்த மாநிலங்கள் மூலமாகத் தமிழ்நாடு முழுவதும் பரவாமல் இருக்க மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன.
இச்சூழலில் கூடலூர் பகுதியிலுள்ள எட்டு சோதனைச் சாவடிகளில் எந்தவித ஆய்வும் செய்யாமல் அலுவலர்கள் மெத்தனம் காட்டிவருவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நாடுகாணி, பாட்டவயல், கக்குண்டி, சோலாடி, தாளூர், நம்பியார்குன்னு, கக்கநல்லா போன்ற எட்டு சோதனைச் சாவடிகள் உள்ளன.
தற்போது கேரளாவில் கொரோனா மட்டுமின்றி பறவை, குரங்கு காய்ச்சல் பீதியுள்ள நிலையில் மாநில எல்லை சோதனைச் சாவடிகளில் ஆறு பேர் கொண்ட குழு முழுவதுமாக ஆய்வுசெய்து கிருமி நாசினி மருந்து தெளிக்க, 10 நாள்களுக்கு முன் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். ஆனால் பெயரளவிற்கு இரண்டு நாள்கள் மட்டுமே, இந்த ஆய்வு நடைபெற்ற நிலையில் தற்போது ஐந்து சோதனைச்சாவடிகளில் எந்தவித ஆய்வும் செய்யப்படவில்லை.
மேலும் மீதமுள்ள மூன்று சோதனைச்சாவடிகளில் பெயரளவிற்கு ஒன்று அல்லது இரண்டு ஊழியர்களை வைத்துக்கொண்டு துண்டறிக்கை மட்டுமே வழங்கப்பட்டுவருகிறது. அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்லும் இந்த எல்லைப் பகுதிகளில் அலுவலர்களின் இந்த மெத்தனப்போக்கு என்பது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.