நீலகிரி: சென்னையை அடுத்துள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கபட்டு வரும் சிங்கங்களுக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதி செய்யபட்டது. அதில் நீலா என்ற பெண் சிங்கம் உயிரிழந்தது.
இது வனத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தமிழ்நாடு வனத்துறை கட்டுபாட்டில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கும் தொற்று பரவி உள்ளாதா? என்பதை கண்டறிய வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள ஆறு பெண் யானைகள், ஒரு மக்னா யானை, 21 ஆண் யானைகளுக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளபட்டது. முதுமலை வன கால்நடை மருத்துவர் ராஜேஷ், வனச்சரகர் தயாநந்தன் தலைமையிலான குழுவினர் யானைகளின் தும்பிக்கைகளில் இருந்து பாதுகாப்பான முறையில் சளி மாதிரிகளை சேகரித்தனர்.
தற்போது சேகரிக்கபட்டுள்ள 28 யானைகளின் சளி மாதிரிகள் உத்தரப் பிரதேசத்தில் உள்ள வன உயிரியல் ஆய்வு மையத்திக்கு அனுப்பி வைக்கபடுகிறது. இதனிடையே வாழைத்தோட்டம் பகுதியில் கடந்த மாதம் பிடித்து கூண்டில் அடைக்கபட்டுள்ள ரிவால்டோ யானைக்கும் கரோனா பரிசோதனை செய்யபடுகிறது.