நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் போதைப்பொருள் விற்பனை போன்ற குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இதனை தடுக்க குன்னூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ் உத்தரவின் பேரில், பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அரவங்காடு காவல் நிலைய ஆய்வாளர் பிலிப் தலைமையில் காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டிருக்கையில், எம் ஜி காலனி பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் இளைஞர் ஒருவர் நடமாடிக் கொண்டிருந்தார். அவரை பிடித்து சோதனைச் செய்ததில் 14 கஞ்சா பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தியதில், அந்நபர் குப்பைக் குழி அருகே உள்ள அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை குடியிருப்பை சேர்ந்த இருதயசாமி என்பவரின் மகன் லியாண்டர் (24) என்பதும், கஞ்சா பாக்கெட்டுகளை கோவையைச் சேர்ந்த நண்பரிடம் இருந்து பெற்றதும் தெரியவந்தது.
இதனை அடுத்து, அவரை கைது செய்த காவல்துறையினர் குன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 20 ஆயிரம் லிட்டர் சாராயம் பறிமுதல் - இருவர் கைது