நீலகிரி: சுற்றுலாத் தளங்களில் கட்டுப்பாடுகளை கடைபிடிக்காத வணிக நிறுவனங்களுக்கு அலுவலர்கள் அபராதம் விதித்து, எச்சரித்து சென்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் 65 விழுக்காடு வனப்பகுதிகள் உள்ளன. மாவட்டத்தின் சுற்றுச்சூழல், இயற்கை அழகை பாதுகாக்கும் வகையில் பேப்பர் டம்ளர், நெகிழிப் பொருள்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களில் பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கபடுகின்றனர்.
மேலும், நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்ற பதாகைகள் சாலை ஓரங்களிலும் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் காணப்படும் இடங்களிலும் வைக்கப்பட்டுள்ளன. 2020 ஜனவரி முதல் மாநிலம் முழுவதும் நெகிழிப் பொருள்களுக்கு தடை பிறப்பிக்கபட்டது.
அந்தவகையில், குன்னூர் நகராட்சி ஆணையர் பாலு உத்தரவின் பேரில் நகர் நல அலுவலர் ரகுநாதன், சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் கடைகளில் ஆய்வுமேற்கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளனர். குன்னூர் சந்தை, கடைகள், சுற்றுலாப் பயணிகள் அதிகளவு கூடும் இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்து பயன்படுத்தி வந்த கடைக்கு 3500 ரூபாய் அபராதம் விதித்தனர். முகக் கவசங்கள், தகுந்த இடைவெளி பின்பற்றாத நபர்களுக்கு 2200 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இது குறித்து அலுவலர்கள் தெரிவிக்கையில், குன்னூர் பகுதியில் மட்டும் கிலோ கணக்கில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதே கடைகளில் மீண்டும் இவை பிடிபட்டால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.