நாட்டின் மிகப்பெரிய தேயிலை கூட்டுறவு கூட்டமைப்பான நீலகிரி மாவட்டம் குன்னூர் இன்கோ சர்வ் 30 ஆயிரம் சிறு விவசாயிகளுடன் 55 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் இன்கோ சர்வின் புதிய ரோஸ் டீ உள்பட புதிய தேயிலை தூள் ரகங்களை அறிமுகப்படுத்தினார். இதைத் தொடர்ந்து, இதற்கான விற்பனையகம் இன்று (டிசம்பர் 17) குன்னூரில் தொடங்கப்பட்டது.
இதனை இன்கோ சர்வ தலைமை செயல் அலுவலர் சுப்ரியா சாகு ஐ.ஏ.எஸ், நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதைத் தொடர்ந்து, இன்கோ சர்வின் புதிய இணையதளம் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் இன்கோ சர்வ மூலம் குன்னூர் காவல்துறைக்கு 60 பேரிகாட்கள் வழங்கப்பட்டன.
இதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சுப்ரியா சாகு கூறியதாவது, இந்த புதிய வகை தேயிலைத்தூள் விற்பனையை தொடங்க, தமிழ்நாட்டில் சென்னை மெட்ரோ ரயில் உள்பட அனைத்து ரயில் நிலையங்களிலும் விற்பனையகங்கள் ஏற்படுத்த இன்கோ சர்வ் திட்டமிட்டுள்ளது. மதிப்புக்கூட்டு தேயிலைத் தூள்களுக்கு தர சான்றிதழ்களை பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.