நீலகிரி: குன்னூர் அருகே உள்ள நஞ்சப்பசத்திரம் என்ற பகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி முன்னாள் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 12 பேர், குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ மையத்தில், நடக்கவிருந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ஹெலிகாப்டர் மூலம் சென்றுக் கொண்டு இருந்தனர்.
அப்போது குன்னூர் அருகே உள்ள நஞ்சப்பசத்திரம் கிராமம் அருகே சென்றபோது மோசமான வானிலை மற்றும் மேகமூட்டம் காரணமாக, ஹெலிகாப்டர் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த பிபின் ராவத்தின் மனைவி மதுலிகா ராவத் உட்பட 12 பேர் பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பிபின் ராவத் மற்றும் வருண்சிங் இருவர் மட்டும் வெல்லிங்டன் ராணுவ மையத்தில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். இதில் பிபின் ராவத் மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில் வருண்சிங் மட்டும் பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்து நடந்து இரண்டாம் ஆண்டு அனுசரிக்கும் விதமாக, நஞ்சப்பசத்திரம் பொதுமக்கள் விபத்து நடந்த பகுதியில் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து உயிர் இழந்தவர்களின் தியாகத்தை நினைவூட்டும் வகையில் அப்பகுதியில் தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு வனத்துறை ஒப்புதலுடன் (ஸ்மிருதிகா) நினைவு சின்னம் கட்டப்பட்டது.
இதனை ரியர் அட்மிரல் பூர்வீர் தாஸ் தலைமையில் ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் குன்னூர் கோட்டாட்சியர் பூஷணகுமார் ஆகியோர் திறந்து வைத்தனர். மேலும் இந்நிகழ்சியில் அரசு அதிகாரிகள், மற்றும் கிராம மக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து நினைவு நாள்: SMRITIKA நினைவு சின்னம் திறப்பு.. சிறப்பு தொகுப்பு!