நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழை காரணமாக குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் தீயணைப்பு துறையினர் மரங்களை வெட்டி அகற்றியதால் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. இதுமட்டுமின்றி, குன்னூர் மவுண்ட்ரோடு அருகே அமைந்துள்ள தடுப்பு சுவர் இடிந்து விழுந்து இரண்டு வாகனங்கள் முழுமையாக சேதமடைந்தன. டிடிகே சாலையில் கற்களுடன் மண் சரிவு ஏற்பட்டதால், வீடுகள் இடிந்து விழும் அபாய நிலையில் அந்தரத்தில் தொங்குகின்றன.
இதனால், சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என காவல் துறையினர் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர். மேலும், ஆபத்தான இடங்களில் குடியிருப்போர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகளை விட்டு வெளியே வருமாறு வருவாய்த் துறையினர் தகவல் தெரிவித்து வருகின்றனர்.