நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை பாதையில், கடந்த இரண்டு தினங்களாக குட்டியுடன் தாய் யானை சுற்றிவருகிறது. இதனால் அவ்வப்போது இந்த யானைகள் சாலையில் உலா வருகின்றன.
இதனால் மலைப் பாதையில் வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் இன்று பரலியார் அருகே மலைப்பாதையில் குட்டியுடன் வந்த காட்டு யானை வாகனங்களுக்கு முன்பு நின்றதால் வாகன ஓட்டுநர்கள் அச்சமடைந்தனர். மேலும் அவ்வழியே வந்த வாகனங்கள் பல பின்னோக்கி இயக்கப்பட்டன.
அப்போது வாகனங்களில் வந்தவர்கள் மொபைல் போனில் இக்காட்சியை பதிவு செய்தனர். சுமார் அரை மணி நேரம் சாலையில் நின்ற யானைகள் பிறகு வனப்பகுதிக்குள் சென்றன. இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தற்போது சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் நிலையில் வனத்துறையினர் இப்பகுதியில் ரோந்து பணிகளை மேற்கொண்டு கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டுமென வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.