நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உபதலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பழத்தோட்டம் பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட்டில் மூன்று கரடிகளின் நடமாட்டம் இருந்துவருகிறது. இந்தப் பகுதியில் விவசாய நிலங்களும், பழங்களும் அதிகளவில் உள்ளதால் அவ்வப்போது இந்தப் பகுதிக்கு வரும் கரடிகளால் பொதுமக்கள் அச்சத்தில் நடமாடிவருகின்றனர்.
இந்நிலையில், இன்று தேயிலைத் தோட்டத்திற்கு பணிக்கு தொழிலாளர்கள் செல்லும்போது, ஆறு வயதுடைய பெண் கரடி ஒன்று உயிருக்குப் போராடிய நிலையில் இருப்பதாக வனத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அளித்தும் காலதாமதமாக வந்த வனத் துறையினர், கால்நடை மருத்துவரை வரவழைப்பதற்கு கால தாமதமாக்கியதில் நான்கு மணி நேரம் கரடி உயிருக்கு போராடி, பரிதாபமாக உயிரிழந்தது.
மேலும், கரடி வாயில் நுரையுடன் உயிரிழந்ததால், அருகில் உள்ள விவசாயம் நிலங்களில் விஷம் வைத்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடந்துவருகிறது. மேலும், மூன்று கரடிகளில் ஒன்று உயிரிழந்த நிலையில், மீண்டும் இரண்டு கரடிகள் அதே பகுதியில் உலா வருவதால், அந்தக் கரடிகளையும் கூண்டு வைத்துப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.