குன்னூர் அருகே உள்ள கேத்தி சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்றுவருகின்றனர். கடந்த 23 நாட்களாக கல்லூரி நிர்வாகத்திற்கும் பேராசிரியர்களுக்கும் நடந்த சம்பள நிலுவை தொடர்பான பிரச்னையால் பேராசிரியர்கள் கல்லூரி வகுப்புகளை புறக்கணித்து பணிக்கு வராமல் இருந்தனர்.
மேலும் நிர்வாகத்தினர் பேராசிரியைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி 5 மாத சம்பள நிலுவையில் 3 மாத சம்பளத்தை வழங்கி பணிக்கு திரும்புமாறு கேட்டுக்கொண்டபோதும் அவர்கள் பணிக்கு வர மறுத்துள்ளனர்.
இந்நிலையில் மாணவர்கள் இணைந்து பேராசிரியர்கள் வகுப்புகளை நடத்த வேண்டும் என கோஷங்கள் எழுப்பி கல்லூரி நுழைவு வாயில் முன்பு போராட்டம் நடத்தினர்.
சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு கல்லூரி முதல்வர் மாணவர்களிடம் இன்னும் இரண்டு நாட்களில் மீண்டும் வகுப்புகள் வழக்கம்போல் செயல்படும் என்றும் பேராசிரியர்கள் பணிக்கு திரும்புவார்கள் என்றும் உறுதி அளித்த பிறகு மாணவ-மாணவியர்கள் கலைந்து சென்றனர்