நீலகிரி: கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு உதகை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்று (ஜன.05) நடைபெற்றது. இதில் அரசுத் தரப்பு வழக்கறிஞர்களான ஷாஜகான், கனகராஜ் மற்றும் எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
அதேபோல், இந்த வழக்கினை விசாரணை செய்து வரும் சிபிசிஐடி போலீஸ் பிரிவின் விசாரணை அதிகாரியான ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையிலான சிபிசிஐடி போலீசாரும், இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகளாகக் கூறப்படும் சயான், வாளையார் மனோஜ், உதயகுமார் ஆகியோர் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர்.
அப்போது, கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட பிஜின் குட்டி உள்ளிட்ட 8 பேரின் செல்போன் உரையாடல்கள் அறிக்கையாக நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு, அந்த 8 செல்போன்கள் மற்றும் 4 சிம் கார்டுகளை ஆய்வு செய்த தொழில்நுட்ப ஆய்வகம், கடந்த மாதம் நீதிமன்றத்தில் 3 பென்டிரைவ்களை ஒப்படைத்த தகவல்களாக பெற்றுச் சென்ற சிபிசிஐடி போலீசார் அறிக்கையாகத் தாக்கல் செய்தனர்.
மேலும், இந்த வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ள பிஜின் குட்டி, தீபு, ஜம்ஷீர் அலி ஆகியோரின் 8 செல்போன்களின் உரையாடல்களைக் கொண்டு சேகரிக்கப்பட்ட அறிக்கையைப் படித்து, மேலும் பலரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்பதால் சிபிசிஐடி போலீசார் தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணையை பிப்ரவரி 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட நீதிபதி அப்துல்காதர் உத்தரவிட்டார். இதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான், "கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் 19 செல்போன் டவர்கள் மற்றும் 60 சிம்கார்டு பதிவுகளை குஜராத் ஆய்வகத்திற்கு நீதிமன்றம் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த ஆய்வு அறிக்கையைப் பெற உயர் அதிகாரிகள் குஜராத்திற்குச் சென்றுள்ளனர். ஓரிரு நாட்களில் ஆய்வறிக்கை கிடைத்தவுடன், அதன் அடிப்படையில் விசாரணை விரிவுபடுத்தப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: “எங்கள் பெரியண்ணா..” விஜயகாந்த் நினைவிடத்தில் சூர்யா கண்ணீர் மல்க அஞ்சலி!