உதகை கமர்சியல் சாலையில் இன்று வாகன நிறுத்தம் செய்யும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாருதி 800 கார் திடீரென தீ பிடித்தது. ஆரம்பத்தில் குறைவாக எரிந்த தீயானது திடீரென மளமளவென எரியத் தொடங்கியது.
இதனால் அப்பகுதியில் உள்ள ஹோட்டல்கள், வணிக வளாகங்களில் உள்ளவர்கள் கார் எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்து தங்களது கடைகளை அடைத்தனர். காரில் எரிந்த தீயால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.
தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இதையடுத்து, காரின் உரிமையாளர் தன் கார் எரிந்ததை கண்டு அதிர்ந்துபோனார். பின்பு காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் உதகை கமர்சியல் சாலையில் திடீரென கார் தீப்பற்றி எரிந்த சம்பவத்தால் அந்த சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.