நீலகிரி மாவட்டம் குன்னூர், கூடலூர், ஊட்டி சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 862 வாக்குச்சாவடிகள் உள்ளன. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னங்கள் ஒட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குன்னூர் பிராவிடன்ஸ் கல்லூரியில் நடந்துவரும் வேட்பாளர்களின் சின்னங்கள் ஒட்டும் பணியை ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில். “நீலகிரி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 162 அரசுப் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கு கரோனா பாதுகாப்பு கவச உடை பயன்படுத்துவது உள்ளிட்ட பாதுகாப்பு செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அரசுப் பணியாளர்களுக்கான கரோனா பாதுகாப்பு கவச உடைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 6 மணியிலிருந்து 7 மணி வரை வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காய்ச்சல் என வந்தவர்களுக்கும் மாலை 6 மணிக்கு வாக்களிக்க அனுமதிக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் 112 வாக்குசாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் எனக் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் தேர்தல் பார்வையாளர் ஒருவர் கண்காணிப்புடன், கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். இந்த வாக்குச்சாவடிகளில் மத்திய பாதுகாப்புப் படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். மேலும் 868 வாக்குச்சாவடிகளில் ஐம்பது விழுக்காடு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க : பாகிஸ்தானில் ஹோலி கொண்டாடிய இந்துக்கள்!