நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் அரசு மற்றும் தனியார் சார்பில் ஏராளமான ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன. தனியார் மூலம் இயக்கப்படும் ஆம்புலன்ஸ்கள் தரமானதாக உள்ளன. ஆனால், தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ்கள் பெரும்பாலானவை சமவெளியில் ஓடி தேய்ந்த பிறகு மலைப்பகுதிக்கு அனுப்பப்படுகிறது.
இந்த பகுதி மலை பகுதி என்பதால், அடிக்கடி 108 ஆம்புலன்ஸ்கள் பழுதடைந்து நிற்பதும், விபத்துக்கள் ஏற்படுவதும் வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், நேற்று குன்னூரில் இருந்து கோவை மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சை பிரிவுக்கு நோயாளி ஒருவரை தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ்ஸில் கொண்டு சென்றனர். அப்போது ஆம்புலன்சின் ‘ஆக்சிலேட்டர்’ உடைந்தததால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
பின்னர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மாற்று ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு நோயாளி அனுப்பி வைக்கப்பட்டார். அவ்வப்போது ஆம்புலன்சில் ஏற்படும் கோளாறுகளால் நோயாளிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். எனவே, புதிய ஆம்புலன்ஸ் வழங்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.