நீலகிரி: உதகை அருகே உள்ள தாம்பட்டி அண்ணா நகர் பகுதியில் வசித்து வருபவர் கணேசன் 41 வயதான இவர் திருமணமாகி 5 மாதத்திலேயே மனைவி உயிரிழந்த நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கிராமப் பகுதியில் கூலி வேலை செய்து வரும் கணேசன் நாள்தோறும் மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
மேலும், மது போதையில் நாள்தோறும் 108 ஆம்புலன்ஸ் அவசர சேவை மையத்தைத் தொடர்புகொண்டு தனக்கு உடல்நிலை சரியில்லை தன்னை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேபோல் நேற்று மாலை 108 ஆம்புலன்ஸ் அவசர சேவை மையத்தைத் தொடர்புகொண்டு தனக்கு உடல்நிலை சரியில்லை தன்னை ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறிய போது ஆம்புலன்ஸ் வாகனம் அனுப்ப முடியாது எனக் கூறியதால் தமிழக முதலமைச்சரின் இல்லம் உட்பட 8 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக 108 அவசர சேவை மையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனை அடுத்து உடனடியாக அவசர சேவை மையத்தில் இருந்து சென்னை தலைமை காவல்துறை கட்டுப்பாட்டு மையத்திற்குப் புகார் அளித்ததன் அடிப்படையில் நீலகிரி மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், தமிழக முதலமைச்சரின் இல்லம் உட்பட 8 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது உதகை அருகே உள்ள தாம்பட்டி அண்ணா நகர்ப் பகுதியில் வசித்து வரும் கணேசன் தான் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் கணேசனைக் கைது செய்து, அவர் மீது வெடிகுண்டு மிரட்டல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு லவ்டேல் b2 காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தான் மதுபோதையில் 108 ஆம்புலன்ஸ் அவசர சேவை மையத்திற்கு மையத்தைத் தொடர்புகொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகக் கணேசன் கூறியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இச்சம்பவம் உதகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாஞ்சோலை வனப்பகுதியில் முகாமிட்டுள்ள அரிக்கொம்பன்.. பொதுமக்கள் அச்சம்