நீலகிரி: அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில், 17 தொகுதிகளில் அக்கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் நேற்று முன் தினம் வெளியிடப்பட்டது. ஆனால், உதகை, தளி, விளவங்கோடு ஆகிய மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், தமிழ்நாடு பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி. ரவி, அவசர அவசரமாக சிக்மங்களூருவில் இருந்து உதகைக்கு இன்று மதியம் இரண்டு மணிக்கு ஹெலிகாப்டர் மூலமாக வந்தார். உதகை தீட்டுக்கல் பகுதியில் சி.டி. ரவி வந்திறங்கியதும், அவர் வந்த ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் சோதனை செய்தனர். அதைத்தொடர்ந்து, அவர் தனியார் திருமண மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும், ஒரு மணிநேரத்தில் 20க்கும் மேற்பட்ட வேட்பாளர்களிடம் நேர்காணலையும் நடத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், உதகை உள்ளிட்ட மூன்று தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் இன்று வெளியிடப்படும் என்றார்.
அப்போது, குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்துவோம் என அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அதிமுகவிற்கு குழப்பம் இருப்பதாகவும், அதனை தெளிவுபடுத்துவோம் எனவும் பதிலளித்தார். மேலும், அச்சட்டத்தால், யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றார்.
இதையும் படிங்க: கோவையில் கார்த்திகேய சிவசேனாபதி காரை சிறைப்பிடித்த அதிமுகவினர்!