நீலகிரி மாவட்டத்தில் 35 ஊராட்சி மன்றங்கள் உள்ளன. அவற்றில் திடக்கழிவு மேலாண்மைக்கு போதிய வசதிகள் செய்யப்படாமல் இருந்தன. இதனையடுத்து மாவட்ட ஊராட்சி நிதியின் மூலம் 14 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு 14 வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.
இந்த வாகனங்களை ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி உதகையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கலந்துகொண்டு வாகனங்களை ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர், "பிரிட்டனிலிருந்து நீலகிரிக்கு கடந்த மாதம் 14 பேர் வந்ததில், 5 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இவர்களுக்கு உருமாறிய கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய ஐந்து பேரின் சளி, ரத்த மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. தற்போது ஐந்து பேரும் தனிமைப்படுத்திவைக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் பறவைக்காய்ச்சல் வேகமாகப் பரவிவருகிறது. எனவே அங்கிருந்து நீலகிரி மாவட்டத்திற்குள் வரும் அனைத்து வாகனங்களும் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன.
கோழி உள்ளிட்டவற்றை கொண்டுவர தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட எல்லையில் உள்ள கடைகளில் கால்நடை பராமரிப்புத் துறை, வனத் துறை, காவல் துறை ஆகிய மூன்று துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்கள் சோதனை நடத்திவருகின்றனர்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பறவைக் காய்ச்சல் அச்சம்...! பாதி விலையில் கிடைக்கும் சிக்கன், முட்டை!