நீலகிரி: கோத்தகிரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் சமீப காலமாக யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக கோத்தகிரி செல்லும் சாலையிலுள்ள அரவேணு பெரியார் நகர் பகுதியில் குடியிருப்பைச் சுற்றி கரடிகளும் தொடர்ந்து உலா வருகின்றன.
ஏற்கனவே இப்பகுதி பொதுமக்கள் கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினருக்கு தொடர் கோரிக்கை வைத்து வரும் நிலையில் இன்று(பிப்.21) மீண்டும் ஒற்றைக் கரடி உலா வந்தது. இதனால் குடியிருப்பு வாசிகள் மிகுந்த அச்சம் அடைந்தனர். பிறகு நீண்ட நேரம் குடியிருப்பை சுற்றி வந்த கரடி பின்பு தேயிலைத் தோட்டத்திற்குள் சென்றது.
ஒரே குடியிருப்பைச் சுற்றி கரடிகள் தொடர்ந்து உலா வருவதை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து, வேறு அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோத்தகிரியில் பிடிபட்ட இரண்டு கரடிகள் முதுமலை வனப்பகுதியில் விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மீன் வளர்ப்பு உரிமம் தடையால் பாழடைந்த குளங்கள்.. குமரி மக்களின் கோரிக்கை என்ன?