நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவது அதிகரித்துள்ளது. குறிப்பாக கோத்தகிரி, மிளிதேன் உள்ளிட்ட கிராமங்களில் 1 மாதமாக கரடி சுற்றுகிறது.
இதனையடுத்து இரவு நேரங்களில் வீடு வீடாக செல்லும், கரடியைக் கண்டு அச்சம் அடைந்த பொது மக்கள், உடனே அந்த கரடியை, கூண்டு வைத்துப் பிடிக்குமாறு வனத்துறையினருக்குக் கோரிக்கை விடுத்தனர். அக்கோரிக்கையை ஏற்று வனத்துறையினர் அக்கிராமத்திற்குள் 10 நாள்களுக்கு முன்பு, கரடிக்குப் பிடித்த உணவுப் பொருள்கள் வைத்து கூண்டு வைத்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு (ஜூலை 2) வழக்கம்போல குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்த கரடி, கூண்டிற்குள் சென்று உணவுப் பொருள்களைச் சாப்பிட்டுச் சிக்கியது. இதனையடுத்து பொதுமக்கள் உடனடியாக கோத்தகிரி வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற மாவட்ட வன அலுவலர்கள் கூண்டில் சிக்கியிருந்த கரடியை வேறொரு கூண்டிற்கு மாற்ற முயன்றனர். ஆனால் கரடி ஆக்ரோஷமாக இருந்ததால், சுமார் 5 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, வேறொரு கூண்டிற்கு மாற்றப்பட்டு வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர்.
இதையும் படிங்க: காயம்பட்ட காட்டுயானைக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள்!