தமிழ்நாட்டில் மலையாளம் பேசும் ஈழுவா, தீயா சமூகத்தைச் சேர்ந்த பத்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வாழ்ந்துவருகின்றனர். இச்சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசால் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக சாதிச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. சாதிச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் மேற்படிப்பு, வேலைவாய்ப்பு, தொழில் செய்வது போன்ற அடிப்படை உரிமைகள் பெற பெரும் சிக்கல்கள் நீடித்துவந்தன.
இதுதொடர்பாக தங்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கக்கோரி அரசிடம் பலமுறை மனுக்கள் அளித்தும், பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர். நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஈழுவா, தீயா மக்கள் வசித்துவருகின்றனர். சாதிச் சான்றிதழ் இன்றி மலை மாவட்டத்தில் வசிக்கும் ஈழுவா, தீயா சமூகத்தினர் மிகவும் மோசமான சூழலில் வாழ்ந்துவந்தனர்.
இதனையடுத்து, சாதிச் சான்றிதழ் வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர், சட்டப்பேரவை உறுப்பினர், எம்பி ஆகியோரிடம் இம்மக்கள் மனுக்கள் அளித்தனர். பின்னர் கவன ஈர்ப்பு போராட்டங்களையும் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான சான்றிதழ் வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது.
இதுதொடர்பாகப் பேசிய அம்மக்கள், “பல ஆண்டுகளாகச் சாதி சான்றிதழ் இன்றி தவித்துவந்த தங்களுக்கு தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோருக்கான சாதிச் சான்றிதழ் வழங்க அரசாணை பிறப்பித்தது, மகிழ்ச்சியளிக்கிறது. உடனடியாக தங்களுக்கு சாதிச் சான்றிதழ் கிடைத்தால் பிற மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பிற்கு உதவியாக இருக்கும். வார்டுகளில் தனி முகாம் அமைத்து சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: கந்தசஷ்டி விவகாரம்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!