நீலகிரியில் தொடர்ந்து வனவிலங்குகள் உயிரிழப்பு நடைபெற்று வருவது சமூக ஆர்வலர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை, பர்லியார் அருகே உள்ள கோழிக்கரை பகுதியில் பிறந்து சில நாட்களை ஆன பெண் குட்டி யானை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற குன்னூர் வனச்சரகர் ரவீந்திரன் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள், குட்டி யானை இறந்த தகவலை வெளியில் தெரியாமல், பிறந்த குட்டி யானையை கோழிக்கரை வனப்பகுதியில் புதைத்ததாக சொல்லப்படுகிறது. நீலகிரியில் மர்மமான முறையில் 10 புலிகளின் உயிரிழந்த சம்பவத்திற்கே விடை தெறியாத நிலையில், குந்தா வனச்சரக பகுதியில் கடந்த மாதம் காட்டெருமை சுட்டுக் கொல்லப்பட்டு பல நாட்களாகும் நிலையில், வனத்துறையினர் இதுவரை துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை கைது செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பர்லியார் பகுதியில், பிறந்து சில நாட்களான பெண் குட்டி யானை இறந்தது பல்வேறு வகையிலான பிரச்சினைகளை கிளப்பி உள்ளது. மர்மமான முறையில் இறந்த யானையின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்து, புதைத்ததாக வனத்துறை அதிகாரிகள தகவல் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க: மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த குழந்தையை கடத்த முயன்ற மர்ம நபர்.. சிசிடிவி காட்சிகள்..!
இதுகுறித்து, மாவட்ட வன அலுவலர் நிருபர்களிடம் கூறியதாவது, "கடந்த மூன்று நாட்களாக குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை அருகே கோழிக்கரை பகுதியில், காட்டு யானை குட்டி நோய்வாய்ப்பட்டு உள்ளதாகவும், அதன் அருகே தாய் யானை சுற்றி வருவதாகவும் வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து வனத்துறையினர் மூன்று நாட்களாக குட்டி யானையை கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக குட்டி யானை உயிரிழந்துள்ளது. மேலும், தாய் யானை, குட்டியை பிரிந்து செல்லாமல் அப்பகுதியிலேயே சுற்றி இருந்ததால், குட்டி யானையை அப்புறப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, தாய் யானை அப்பகுதியில் இருந்து சென்றவுடன், வனத்துறை அதிகாரிகள் குட்டி யானையை பிரேத பரிசோதனை செய்து அப்பகுதியில் புதைத்தனர்" என்று கூறினார்.
நீலகிரி மாவட்டத்தில் புலி, காட்டெருமை, யானை போன்ற வனவிலங்குகள் அடுத்தடுத்து உயிரிழக்கும் சம்பவத்திற்கு சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: செய்யாத தவறுக்காக எந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க மட்டோம்: வேலூர் சரக டிஐஜி முத்துசாமி உறுதி