நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்தில் T23 புலி மற்றும் சங்கர் யானை பிடிபட்ட போது முன்களத்தில் சிறப்பாக பணியாற்றிய பழங்குடியின வேட்டை தடுப்பு காவலர்கள் பொம்மன், மாதன், மீன் காளன் ஆகிய மூவருக்கு சர்வதேச புலிகள் தினத்தன்று மகாராஷ்டிராவில் விருது வழங்கி கவுரவிக்க உள்ளனர்.
தேசிய புலிகள் தினமான ஜூலை 29 ஆம் தேதி மகாராஷ்டிராவில் உள்ள வனத்துறை அகாடமியில் நடைபெறும் விழாவில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் இந்த விருதுகளை வழங்கி கௌரவிக்க உள்ளார்.
விருதுக்கு தேர்வானவர்கள் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் 3 பேரை கொன்ற சங்கர் யானையை பிடிக்கும் பணியின் போது அந்த யானையின் இருக்கும் இடத்தை அதன் கால் தடத்தை கொண்டு கண்டறிந்தனர். மேலும் அந்த யானை எந்த இடத்துக்கு எப்போது வரும் என துல்லியமாக கணித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அத்தகவலின்பேரில் 1 மாதத்திற்கு பிறகு சங்கர் யானை பிடிக்கப்பட்டது.
அதேபோன்று கூடலூர், மசினகுடி பகுதியில் மனிதர்களை வேட்டையாடி வந்த டி 23 என்ற புலியை பிடிக்க 20 நாட்களுக்கும் மேலாக வனத்துறையினர் ஈடுபட்டிருந்தபோது, புலியின் கால் தடம் அதன் உடல் அமைப்பை வைத்தும், புலி செல்லக்கூடிய இடங்களை கண்டறிந்து சிறப்பாக வழி நடத்தியது காரணமாக இவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் மோடியின் வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு